உங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ? (D9 – நவாம்சம் என்ன சொல்கிறது ?)
வணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் நாம் காண இருப்பது D9 என்று கூறப்படும் நவாம்சத்தை வைத்து ஒருவரின் திருமண வாழ்க்கை, திருமணத்திற்கான நிலை, திருமணத்திற்குப் பின்பு வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுமா அல்லது ஏற்படாதா திருமண பந்தம் நமக்கு என்ன கொடுக்க இருக்கிறது என்பதைப் பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.
ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் ராசி கட்டம் மற்றும் நவாம்சம் இல்லாமல் இருக்காது. அந்த வகையில் நவாம்சத்தின் பங்கு மிகவும் முக்கியமானது என்று கூறலாம்.
ஜாதகத்தில் ராசி கட்டம் என்பது உடல் என்றால் நவாம்சம் என்பது உயிராகும். அதனால்தான் அந்தக் காலத்தில் இருந்து இந்த காலம் வரைக்கும் ராசி கட்டம் மற்றும் நவாம்சத்தை பிறப்பு ஜாதகத்தில் குறிப்பிடுகிறார்கள்.
ராசி கட்டத்தில் உள்ள கிரகங்களின் பலம் மற்றும் பலவீனத்தை நவாம்சத்தின் மூலம் எளிதாக கண்டறியலாம்.
ராசி கட்டத்தில் லக்னத்தில் இருந்து வரும் ஒன்பதாவது வீடான பாக்கியஸ்தானத்தின் விரிவாக்கமே நவாம்சம் ஆகும். அது மட்டும் இல்லாமல் ராசி கட்டத்தின் ஏழாம் பாவகத்தின் விரிவாக்கமும் நவாம்சம் தான். இது ஜாதகரின் அதிர்ஷ்டம் மற்றும் தர்மம் அடிப்படையில் நல்ல கணவன் அல்லது மனைவி அமையும் நிலையை குறிப்பிடும்.
“மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்ற பழமொழிக்கு ஏற்ப நவாம்சத்தை வைத்து திருமணம், திருமண வாழ்வின் மகிழ்ச்சி, விவகாரத்து, திருமணம் ஆன கணவன்-மனைவி ஆகியோரின் ஒற்றுமை போன்றவற்றை அறிய முடியும்.
நவாம்சத்தை வைத்து கூட்டாளிகள், பங்குதாரர்கள், நம்முடன் சேர்ந்து இருப்பவர்கள், உங்களுக்கு வரக்கூடிய மனைவி அல்லது கணவனின் நிலை, திருமணத்தைப் பற்றிய நிலை, நாம் எதன் மீது பற்றுடன் நடந்து கொள்கிறோம் எதை நோக்கி நாம் செல்கிறோம் என்பதை விரிவாக தெரிந்து கொள்ள உதவுகிறது.
அது மட்டும் இல்லாமல் ராசி கட்டத்தை வைத்து எளிதாக கண்டறிய முடியாத பல விஷயங்களை நவாம்சத்தை வைத்து நாம் கண்டறியலாம்.
ராசி கட்டத்தில் ஒரு ராசியில் உள்ள ஒரு கிரகம் அதே ராசியில் நவாம்சத்திலும் அந்த கிரகம் இருந்தால் அது வர்கோத்தமம் எனப்படும். இந்த அமைப்பின் மூலம் ஜாதகர் ஒரு இலக்கை நிர்ணயித்து அந்த இலக்கை சரியாக அடைந்துவிடுவார் என்று கூறலாம்.
ராசி கட்டத்தில் உள்ள தோஷங்களின் நிலை மற்றும் அதன் அளவீடு போன்றவற்றை எளிதாக அறிந்து கொள்ள நவாம்சம் பயன்படுகிறது. ஒரு உதாரணத்திற்கு ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ராகு கேது தோஷம் அதாவது நாக தோஷம் இருப்பதாக எடுத்துக் கொள்வோம். இந்த ராகு கேது தோஷம் பாதிப்பை ஏற்படுத்துமா அல்லது ஏற்படுத்தாதா என்பதை நவாம்சத்தை வைத்து கண்டறியலாம்.
ராசி கட்டத்தில் லக்னத்தில் அல்லது இரண்டாம் இடத்தில் ராகு கேது அமர்ந்திருந்து ராகு கேது தோஷத்தை குறிப்பிட்டு, அதேபோல் எந்தவித மாற்றமும் இன்றி நவாம்சம் லக்னத்தில் அல்லது இரண்டாம் இடத்தில் ராகு கேது அமையப்பெற்றிருந்தால் அது கடுமையான ராகு கேது தோஷம் ஆகும். இதற்கு என்னதான் பரிகாரம் செய்தாலும் அது வேலை செய்யாது. அதனால் ராகு கேது தோஷம் உள்ள வரனை ராகு கேது தோஷம் உள்ள வரனுடன் இணைப்பது நல்லது.
அதுவே ராசி கட்டத்தில் லக்னத்தில் அல்லது இரண்டாம் இடத்தில் ராகு கேது அமர்ந்திருந்து ராகு கேது தோஷத்தை குறிப்பிட்டு, நவாம்சத்தில் ராகு கேது தோஷம் இல்லை என்றால் பரிகாரத்தின் மூலம் பிற்காலத்தில் அந்த தோஷங்கள் மறைந்து ராகு கேது தோஷம் உள்ள நபருக்கு இணையான தோஷம் இல்லாத நபரை தேர்வு செய்து அற்புதமான வாழ்க்கையை கொடுத்துவிட்டு செல்லும். இந்த அமைப்பில் தான் ஒரு சிலர் காதலித்து திருமணம் செய்தாலும் தன்னுடைய வாழ்க்கைத் துணையை இமை போல பாதுகாத்து அன்பை பரிமாறி இல்லற வாழ்க்கையை நல்லற வாழ்க்கையாக நடத்தி வருகிறார்கள்.
திருமண வாழ்க்கையில் ஆண் பெண் இருவருக்கும் உடற்தகுதிகள் சரியாக இருக்கிறதா அல்லது இல்லையா என்பதைப் பற்றி நவாம்சத்தை வைத்து அறிந்து கொள்ளலாம்.
நவாம்சம் லக்னத்திற்கு ஒன்றாம் இடம், மூன்றாம் இடம், ஏழாம் இடம் இந்த இடங்களில் புதன் அமர்ந்திருந்தால் திருமணத்திற்கு பிறகு இல்லற வாழ்க்கையில் அவர்களது வாழ்க்கைத் துணையிடம் திருப்தியற்ற தன்மையை ஏற்படுத்துகிறது. இதற்கு காரணம் உடற்தகுதிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாகும். இதற்கு உரிய இறைவழிபாடு மருத்துவ ஆலோசனை மூலம் அடுத்த கட்டத்திற்கு வாழ்க்கை நன்றாக நகரும்.
திருமணத்திற்கு முன்பு ஆண் அல்லது பெண் நவாம்சத்தை பார்த்து அவற்றிலுள்ள குறைகளை கண்டறிந்து அதற்கான உரிய தீர்வினை கண்டுபிடித்துவிட்டால் ஜாதகரும் நல்வழி பெற்று, திருமணத்திற்கான உடற்தகுதிகளைப் பெற்று இல்லற வாழ்க்கையை நல்லற வாழ்க்கையாக வாழலாம்.
ராசி கட்டத்தில் ஐந்தாம் இடத்தில் ராகு அல்லது கேது அமர்ந்திருந்தால் அது கடுமையான புத்திர தோஷத்தை ஏற்படுத்தும். நவாம்சத்திலும் ஐந்தாம் இடத்தில் ராகு அல்லது கேது அமர்ந்திருந்தால் அது கடுமையான புத்திர தோஷத்தை சுட்டிக்காட்டும். இதற்கு உரிய இறைவழிபாடு மற்றும் மருத்துவ ஆலோசனை மூலம் சரி செய்து கொள்ளலாம்.
ராசி கட்டத்தில் ஒன்றாம் இடத்தில் அல்லது ஏழாம் இடத்தில் சூரியன் அமர்ந்திருந்தால் ஆண் அல்லது பெண் அவர்களுடைய வாழ்க்கை துணை எப்படி இருப்பார், வாழ்க்கைத் துணை பற்றிய சிந்தனை இருந்து கொண்டே இருக்கும். இதேபோல் நவாம்சத்திலும் ஒன்றாம் இடத்தில் அல்லது ஏழாம் இடத்தில் சூரியன் அமர்ந்திருந்தால் இந்த எதிர்பார்ப்பின் காரணமாகவே இவர்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும். இவர்கள் எதிர்பார்ப்பில்லாமல் வாழக் கற்றுக் கொள்வது நல்லது.
ராசி கட்டத்தில் ஏழாம் இடத்தில் சந்திரன் அல்லது சூரியன் அமர்ந்திருக்கிறது என்று எடுத்துக் கொள்வோம். இதேபோல் நவாம்சத்தில் ஒன்றாம் இடம் அல்லது ஏழாம் இடத்தில் சந்திரன் அல்லது சூரியன் அமையப் பெற்றிருந்தால் இருந்தால் தன்னைவிட தகுதி குறைந்த வாழ்க்கைத் துணையே இவர்களுக்கு கிடைக்கப்பெறும். நாம் என்னதான் வாழ்க்கைத் துணையை பார்த்து பார்த்து தேர்வு செய்தாலும் திருமண பந்தத்தில் ஏதேனும் ஒரு குறையை அது கொடுத்து விட்டு செல்லும். இவர்கள் எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்ய வேண்டும். இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள் அப்படி எதிரிகள் இருந்தாலும் அவர்கள் இவர்களை விட பலம் குறைந்தவர்களாகவே இருப்பார்கள். ஆனால் திருமணத்தின் போது மட்டுமே இந்த கசப்பினை ஜாதகருக்கு கொடுத்து செல்கிறது.
ராசி கட்டத்தில் லக்னத்தில் அல்லது ஏழாம் இடத்தில் சந்திரன் அல்லது சூரியன் அமையப்பெற்றிருந்தால் இவர்களுக்கு தகுதியை மையமாக வைத்துதான் திருமணம் நடக்கும். காரணம் இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு தன்னைவிட தகுதி குறைந்த வாழ்க்கைத் துணையே கிடைக்க பெறும். இந்த அமைப்பு உள்ளவர்கள் தன்னைவிட தகுதிமிக்க வரனை தேடினாலும் அது திருமணத்தில் முடியாது. இந்த அமைப்பினை நவாம்சம் உறுதிப்படுத்தும். இவர்கள் தன்னைவிட தகுதி குறைந்த வாழ்க்கைத் துணையை தேர்வு செய்தாலும் திருமணத்திற்குப் பிறகு இவர்களது வாழ்க்கையில் கட்டாயமாக முன்னேற்றம் இருக்கும்.
ராசி கட்டத்தில் இரண்டாம் இடம், ஏழாம் இடம், பதினோராம் இடம் இவற்றில் நிற்கக் கூடிய கிரகங்கள் அல்லது அதன் அதிபதிகள் அவர்களின் தசா புத்தி காலங்களில் திருமணத்தை நடத்தி வைப்பார்களா என்பதை நவாம்சத்தை வைத்து அறியலாம். ராசி கட்டத்தில் உள்ள இந்த கிரக அமைப்புகள் நவாம்ச கட்டத்தில் இருந்தால் திருமணத்தை நடத்தி வைக்கும். அதுவே ராசி கட்டத்தில் இரண்டாம் இடம், ஏழாம் இடம், பதினோராம் இடம் சம்பந்தப்பட்ட கிரகங்கள் அல்லது அதிபதிகள் நவாம்சத்தில் ஆறாம் இடம், எட்டாம் இடம், பன்னிரண்டாம் இடத்தில் இருந்தால் திருமணத்தை நடத்தி வைக்காது. அப்படி திருமணத்தை நடத்தி வைத்தாலும் அது திருமணத்திற்கு பிறகு காயத்தை கொடுக்கும் என்று கூறலாம்.
ஒருவரின் பிறந்த நேரம் சரியாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே நவாம்சம் குறிப்பிடும் பலன்கள் துல்லியமாக அமையும். பிறந்த நேரம் சரியாக இல்லாத பட்சத்தில் நவாம்சத்தை வைத்து பார்த்து எந்த பலனும் இல்லை. இதனால்தான் நல்ல ஜோதிடருக்கு நவாம்சம் தேவையில்லை என்ற கருத்து உண்டு. பிறந்த நேரம் சரியாக இருந்தால் நவாம்சம் குறிப்பிடும் பலன்கள் மிகவும் அற்புதமானவை.