Search
திருமண நாள் குறிப்பது எப்படி

திருமண நாள் குறிப்பது எப்படி மற்றும் திருமண நாள் குறிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

Facebook
WhatsApp
Telegram

திருமண நாள் குறிப்பது எப்படி மற்றும் திருமண நாள் குறிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

இன்று பல ஊர்களில் பஞ்சாங்கம் பார்ப்பதற்கு சரியான ஆட்களே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

பஞ்சாங்கம் பார்ப்பவர்களும் ஒரு சில நேரங்களில் தப்பான நாட்களில் திருமணத்தை குறித்து கொடுத்து விடுகிறார்கள். இதனால் கிரகங்கள் பலம் இல்லாத நாட்களில் திருமணம் நடைபெறுகிறது.

இன்றைய காலத்தில் திருமணத்திற்கு பின்பு விவகாரத்து அல்லது தம்பதிகள் பிரிந்து வாழ்வதற்கும் இது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
மணமக்கள் ஜாதகத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும் இந்த முகூர்த்த நேர இலக்னம் நன்கு அமைந்துவிட்டால் அந்தக் குறைகள் காணாமல் போய்விடும்.
முகூர்த்தம்

முகூர்த்தம் என்பது மூன்றே முக்கால் நாழிகை அதாவது ஒன்றரை மணி நேர அளவுள்ள காலமாகும்.

உங்களுக்கு தெரியும் அல்லவா! அந்த காலத்தில் நாழிகை கணக்கு தான் வழக்கில் இருந்தது என்று…

ஒரு நாழிகை என்பது 24 நிமிடம்.

பொதுவாக முகூர்த்தம் எனக் குறிப்பிடுவது திருமண நிகழ்ச்சியில் தாலி கட்டுவதற்கு என்று குறிக்கப்பட்ட மங்கல நேரமாகும்.

ஒரு சில இடங்களில் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் முகூர்த்தத்தை நல்ல காரியம் நிகழ்த்துவதற்கு உரிய நேரம் மற்றும் சுப வேளை என்று…

திருமண நாள் குறிக்கும்போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

திருமண நாள் குறிப்பது எப்படி

திருமண சுபமுகூர்த்தம் குறிக்க தெரிந்து கொள்ள வேண்டியவை

பொதுவாக வருடத்தின் அனைத்து நாட்களிலும் சிறிய அளவில் தோஷங்கள் இருந்து கொண்டுதான் இருக்கும்.

தோஷம் இல்லாத சுப நாட்கள் தேவர்களுக்கும் கிடைக்காது.

அதிக நன்மை நிறைந்த சுப நாட்களில் திருமண தேதியை குறிக்கலாம்.

பெண்ணுக்கு ஜென்ம நட்சத்திரத்திலும், பிள்ளைக்கு அனு ஜென்மங்களிலும் திருமணம் செய்யலாம்.

மூத்த புத்திரனுக்கும், மூத்த புத்திரிக்கும் ஜென்ம நட்சத்திரம், ஜென்ம வாரம், ஆனி மாதம் போன்ற நாட்களில் சுப நிகழ்வுகளுக்கான தேதிகள் குறிக்க கூடாது.

சூரியனோ புதனோ, குரு அல்லது சுக்கிரனால் பார்க்கப்பட்டால் ஆனி மாதம் தோஷமில்லை.

குரு பலம் ஆண் பெண் இருவருக்கும் இருப்பின் மிக நன்று.

குரு பகவான் அவரவர் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆம் இடங்களில் கோச்சாரத்தில் வரும்போது குரு பலம் ஏற்படும். திருமணம் செய்வதற்கு ஒருவருக்கு குருபலமோ, விதியோ இருந்தால் போதும்.

குரு பகவான் ஜென்ம ராசிக்கு 2 ல் இருக்கும் போது திருமணம் நடைபெற்றால் அந்த தம்பதியருக்குத் தன சம்பத்துகள் கிடைக்கும்.

குரு பகவான் ஜென்ம ராசிக்கு 5 ல் இருக்கும் போது திருமணம் நடைபெற்றால் சொற்படி நடக்கும் புத்திரர்கள் பிறப்பார்கள்.

குரு பகவான் ஜென்ம ராசிக்கு 7ல் இருக்கும் போது திருமணம் நடைபெற்றால் பெண்கள் என்றும் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள்.

குரு பகவான் ஜென்ம ராசிக்கு 9ல் இருக்கும் போது திருமணம் நடைபெற்றால் கணவருக்கு சகல செல்வாக்கும் வந்து சேரும்.

குரு பகவான் ஜென்ம ராசிக்கு 11ல் இருக்கும் போது திருமணம் நடைபெற்றால் மனைவி அல்லது கணவன் மூலம் செல்வங்கள் பல வந்து சேரும்.

குரு பலம் போலவே சூரிய பலமும் சிறிது முக்கியமாகக் கருதப்படுகிறது.

சூரிய பலம் என்பது ஒருவரின் ஜென்ம ராசிக்கு சூரியன் 3, 6, 10, 11 ஆம் இடங்களில் கோச்சாரத்தில் வரும்போது சூரிய பலம் ஏற்படும்.

சூரிய பலம் பெண்ணைவிட ஆணுக்கு மிக முக்கியமாக கருதப்படுகிறது.

திருமணம் செய்ய இருக்கும் நாளுக்கு 15 நாட்களுக்கு முன்னதாக சென்று அவரவர் குல தெய்வத்திற்குப் பொங்கலிட்டு வழிபாடு செய்து பிறகு முன்னோர்களைத் தியானித்து அனுமதி பெறவேண்டும்.

திருமணம் நடைபெறும் காலங்கள் மணமக்களுக்கு யோகாதிபதிகளின் தசா புக்திகளாக அமைந்தால் அந்தத் திருமணம் சீரும் சிறப்புமாக அமையும்.

மணமக்கள் இருவருக்கும் குரு பலம் இல்லாத சமயத்தில் இவர்களுக்கு சுக்ரன் அல்லது 2, 7, 11 ஆம் இடத்து அதிபதிகளின் தசா புக்திகள் நடந்தாலும் திருமணம் செய்து வைக்கலாம்.

மணமக்களுக்கு அஷ்டம சனி (சந்திரன் நின்ற இராசியிலிருந்து சனி 8 ஆம் இடத்தில் இருப்பது) நடைபெறும் காலத்தில் திருமணத்தை தள்ளிப்போடுவது சிறப்பைத் தரும்.
மணமக்களுக்கு விரய சனி (சனி 12ஆம் இடத்தில் இருப்பது) நடைபெறும் காலத்தில் திருமணத்தை தள்ளிப்போடுவது சிறப்பைத் தரும்.

குரு பலம் மற்றும் சூரிய பலம், நல்ல தசா புக்தி மற்றும் சனிபகவானின் தாக்கம் இல்லாத காலங்களைத் தேர்ந்தெடுத்த பின்னர் ஒரு நல்ல திருமண தேதியை தேர்வு செய்யலாம். வாருங்கள் நண்பர்களே அடுத்ததாக திருமண தேதியை தேர்வு செய்வதைப் பற்றி பார்ப்போம்.

திருமண தேதியை எப்படி தேர்வு செய்வது மற்றும் திருமண முகூர்த்தம் குறிக்க தவிர்க்க வேண்டியவை

திருமண தேதியை எப்படி தேர்வு செய்வது

திருமண தேதியை எப்படி தேர்வு செய்வது ?

சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி மற்றும் தை மாதங்களைத் தேர்வு செய்து இவைகளில் மலமாதம் இல்லாத மாதத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்பு தான் திருமண தேதியை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பௌர்ணமி ஆனது ஒரே மாதத்தில் வந்தால் அதற்கு மலமாதம் என்று பெயர்.

வளர்பிறையின் துவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி மற்றும் திரயோதசி போன்ற திதி உள்ள நாட்கள் சிறப்பானவை.

இருவர் நட்சத்திரத்திற்கும் தாராபலம் ஏற்றார்போல் உள்ள நாட்களும் சிறப்பானவை தான்.

அன்றைக்கு சந்திரன் மணமக்களின் ஜென்ம ராசிக்கு 1, 3, 6, 7, 10, 11 ராசிகளில் இருப்பது நல்லது.

இரு கண்ணுள்ள நாட்களான புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் திருமணத்திற்கு சிறந்தது.

சித்தயோகத்தை திருமணத்திற்கும் அமிர்தயோகத்தை சாந்தி முகூர்த்தத்திற்க்கும் தேர்வு செய்ய வேண்டும்.

ஒரு கண்ணுள்ள நாட்களான ஞாயிறு மற்றும் திங்கள் பாதி சிறந்த நாளாக கருதப்படுகிறது.

குருட்டு நாட்களான செவ்வாய் மற்றும் சனிக்கிழமையை தவிர்ப்பது நல்லது.

அக்னி ராசிகளான சிம்மம் மற்றும் மேஷத்தை முகூர்த்த லக்னமாக தேர்ந்தெடுக்காமல் இருப்பது சிறப்பு.

முகூர்த்த லக்னத்திற்க்கு ஏழாமிடம் சுத்தமாக இருப்பின் நல்ல கணவன் மனைவி அமைவார்கள்.

எட்டாம் இடம் சுத்தமாக இருப்பின் நீடித்த திருமணபந்தம் ஏற்படும்.

முகூர்த்த லக்னத்திற்கு 12ஆம் இடம் சந்தோசத்தை குறிக்கின்றது.

முகூர்த்த லக்னத்திற்கு 2,7,8ஆம் இடங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் மற்றும் எட்டாம் இடத்தை குரு அல்லது சுக்ரன் பார்க்கலாம். ஆனால் குரு அல்லது சுக்கிரன் எட்டாம் இடத்தில் இருக்கக் கூடாது.

திருமண நாள் மணமக்களின் ஜென்ம நட்சத்திரமாகவோ அல்லது ஜென்ம கிழமையாகவோ அமையாமல் இருப்பது மிக நல்லது.

நவகிரகங்களில் அதிக சுபத்தன்மை பொருந்திய கிரகங்களான குரு மற்றும் சுக்கிரன் அஸ்தங்க தோஷம் அடைந்திருக்கக் கூடாது. அதாவது சூரியனுக்கு பத்து டிகிரிக்குள் வரும் கிரகங்கள் தன் சுய பலத்தை இழந்து விடும். இதனை அஸ்தங்க தோஷம் என்பர்.

பெண்ணிற்கு மாதவிலக்கு நாட்களாக அமையாமல் இருப்பது நல்லது. ஏனெனில் திருமண நாளில் புனிதமான அக்னியை வார்த்து இறைவனை அதில் வரவழைத்து வணங்குகிறோம்.

இராகு காலம் மற்றும் எமகண்டம் போன்ற நேரங்களை தவிர்க்க வேண்டும்.

குளிகை காலத்தைக் கூட தவிர்ப்பது சிறந்ததாகும். காரணம் என்னவென்றால் குளிகை காலத்தில் செய்யும் காரியங்கள் திரும்பவும் செய்ய நேரிடலாம்.

மொத்தம் உள்ள பதினோறு கரணங்களில் அசுப கரணங்களை நீங்கள் தவிர்ப்பது நல்லது.

இப்படி அமையும் திருமண உறவானது என்றும் நிலைத்திருப்பதுடன், ஒருவரையொருவர் விட்டுத் தராமல் அன்புடன் இல்லற இன்பம் பெறுவார்கள் என்பது ஜோதிட ரகசியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இதையும் படிக்கலாமே

நவகிரகத்தினால் ஏற்படும் சகல தோஷங்களும் நீங்கி வாழ்க்கையில் வெற்றி பெற வைக்கும் அற்புத மந்திரங்கள்
உங்களுக்கு செவ்வாய் தோஷம் உள்ளதா கண்டுபிடிப்பது எப்படி ? செவ்வாய் தோஷம் விதிவிலக்குகள் மற்றும் செவ்வாய் தோஷம் பரிகாரம் என்ன ?

Leave a Comment

Picture of ASTRO SAKTHI
ASTRO SAKTHI

அனுபவமே சிறந்த ஆசான்

மற்ற பதிவுகளையும் படிக்க க்ளிக் ⇩